(15.04.2014) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அட்டாளைச்சேனையில் புத்தாண்டு தினமான நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தின்போது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் தனது நண்பருடன் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதேசத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோட்டார் சைக்கிள் பாதையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதுண்டதாலேயே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞரே விபத்தின்போது பலியானார். விபத்தில் பலியானவர் சாய்ந்தமருது-16, ஆலிம் வீதி, ஏ.எம்.சாஜஹான் வீதியைச் சேர்நத எம்.றஸான் என்பவராவார். இவர் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வந்த நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த அவரது நண்பர் சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.