( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை சமூகப் பொலிஸ் பிரிவின் கீழ் செயற்பட்டு வரும் 51 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடந்த கால செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுதலும் எதிர்கால முன்னெடுப்புக்கள் எனும் தொனிப் பொருளிலான ஆலோசனை மாநாடு அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண், சிவில் பாதுகாப்பு மத்திய குழுத் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் ஆகியோர் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சம்மந்தமான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு கடந்த காலங்களில் இக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றி மீளாய்வு செய்ததோடு, எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமாக இதனைச் செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடி திட்டமிட்டனர்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பியலால் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில்; கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ரி.எம்.ஜே.காமினி தென்னகோண் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் பாதுகாப்பு உயரதிகாரிகள், மும்மதத் தலைவர்கள், மதவழிபாட்டு நிருவாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.