மனிதனின் பணிகளில்
இயந்திரங்களின்
வகிபாகம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. உற்பத்தித் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின்
எண்ணிக்கை குறைவடைந்து, தன்னியக்க இயந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்தும் முறைமை
தற்போது அபரிமிதமாகப்
பெருகி வருகின்றது.
மீண்டும்
மீண்டும் ஒரே வேலையினைச்
செய்வது மனிதருக்கு சோர்வினைத்
தரும் விடயமாக
அமையும். ஆனால், அவ்வகையான வேலையினை எவ்வித
களைப்பும் இன்றி இராப்பகலாக செய்வதற்கு இயந்திரங்களால்
முடியும். இயந்திரங்களால் செய்யப்படும் வேலைகள் அநேகமான தருணங்களில் நேர்த்தியாக அமைந்து
பயனாளர்களை
வெகுவாகக் கவர்ந்து விடுகின்றன.
இதற்கு
அப்பால், எதிர்ப்படும் நிலைமைகளுக்கேற்ப செயற்படத்தக்கதான, நுட்பமான செயற்கை நுண்ணறிவினை
உள்ளடக்கிய
தன்னியக்கத்தொகுதிகளும் தற்போது
அறிவியல் ஆய்வுகளால் உருவாக்கப்படுகின்றன. ஐம்புலன்களால்
கிடைக்கப்பெறும் தூண்டல்களுக்கு
ஒத்த துலங்கல்கள் மனித
மூளையால் ஒருங்கிணைக்கப்படுவது போன்ற கட்டமைப்புக்கள்
தன்னியக்கத்தொகுதிகளிலும் வர
ஆரம்பித்துவிட்டன. சிறப்பான
உணரிகள், துல்லியமான செயற்பாடுகளை
உருவாக்கும் இயந்திரத்தொகுதிகள்,
இவை இரண்டினையும்
ஒருங்கிணைக்கும் செயற்கை
நுண்ணறிவு என்பவைகளை
உள்ளடக்கிய
தன்னியக்கத்தொகுதிகளை சிக்கலான செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் முயற்சிகள் பல ஆய்வகங்களில்
முன்னெடுக்கப்படுகின்றன.
இணையத்தளத்தில்
ஆதிக்கம் செலுத்துவது
மட்டுமல்லாமல்,
செலுத்துநர் தேவையற்ற
வாகனம், ‘கூகுள்’ கண்ணாடி
படைப்பு, பறக்கும் மிதவைகள் ஊடான
இணைய இணைப்பு போன்ற பல
அறிவியல் புரட்சிகளை கூகுள் நிறுவனம் படைத்து வருவது நாம் அறிந்ததே. இந்நிறுவனத்தின்
ஆய்விற்கு பொறுப்பான
‘கூகுள் எக்ஸ்’ ஆய்வகம்,
மருத்துவ உபகரணங்களை
உற்பத்தி செய்யும் ‘ஜோன்சன்
அன்ட் ஜோன்சன்’ நிறுவனத்தின்
Ethikon என்ற கிளைநிறுவனத்துடன்
இணைந்து புதிய வியக்கத்தக்க முயற்சிக்குத்
தயாராகும் செய்தி கடந்த
மார்ச் மாதம் 27 ஆந் திகதி வெளியாகியது.
இந்த முயற்சியில் அறுவைச்
சிகிச்சைக்குத் துணைபுரியும்
இயந்திரத்தொகுதி ஒன்றினை
படைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘கூகுள் எக்ஸ்’ ஆய்வகத்தின் வாழ்க்கை
அறிவியல் பிரிவு, உயிர்
வாழ்க்கையில் எதிர்ப்படும்
இடர்களைக் களைவதற்கான முயற்சியில் ஏலவே ஈடுபட்டு வருகின்றது. குருதியில்
பயணித்து புற்றுநோய்
மற்றும் மாரடைப்பு என்பனவற்றினை முன்னதாகக் கண்டறியும் நுண்துணிக்கைகள் உருவாக்கும் முயற்சியில் இந்த
ஆய்வகம் ஈடுபட்டுள்ளது. இது
மட்டுமல்லாமல்,
உடலின் நீரிழிவின் அறிகுறிகளை
கண்காணிக்கும் உணரி
கொண்டமைந்த கண்
ஒட்டுவில்லை இந்த
ஆய்வகத்தினால்
வடிவமைக்கப்பட்டு பயன்படும்
நிலையை அண்மித்துள்ளது. இந்நிலையில், ‘கூகுள் எக்ஸ்’ ஆய்வகத்தின் புதிய
கூட்டு முயற்சி அறுவைச் சிகிச்சையில் புதிய பரிணாம மாற்றத்தினை உண்டுபண்ணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனிதரில் மேற்கொள்ளப்படும் அறுவைச்
சிகிச்சைகள் துல்லியமாகவும்,
அதேவேளை எதிர்ப்படும்
நிலைமைகளை புத்திசாதூரியத்துடன்
எதிர்கொண்டு மேற்கொள்ளப்பட
வேண்டியவையாகும். எனவே, தன்னியக்க இயந்திரங்கள் தனியே
அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுவிட
முடியாது. ஆனால், மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சையினை மேற்கொள்ளுகையில்,
அவசியமான
இடத்தில் துல்லியமாக செயற்படாதவிடத்து தேவையற்ற
காயங்கள், இரத்தப்பெருக்கு என்பவை
ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள்
அதிகம். எனவே, இச்சிகிச்சையில் அறுவைச்
சிகிச்சை இயந்திரத்தொகுதியை
பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட
விரும்பத்தகாதவைகளை
நீக்க இந்நிறுவனங்களின்
இணைந்த முயற்சி கைகொடுக்கும்
என நம்பப்படுகின்றது.
அதாவது, அறிவியல்
ஆய்வுகளால் கட்டமைக்கப்படும் அறுவைச் சிகிச்சை
இயந்திரத்தொகுதி துல்லியமாக செயற்படும் வகையில் அமையும்.
எனவே, அறுவைச் சிகிச்சையானது குறைந்த
காயங்களை மாத்திரம்
ஏற்படுத்தி மேற்கொள்ள முடியும். இது
அறுவைச் சிகிச்சையின் பின்னரான நோயாளி
விரைவாக குணமடைவதற்கான சாத்தியத்தினை ஏற்படுத்தும் என
மருத்துவத் துறைசார் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அறுவைச்
சிகிச்சை இயந்திரத்தொகுதியில்
முன்னேற்றகரமான ஒளிப்படமாக்கும்
வசதிகள், உயர் உணர்திறன் கொண்ட உணரிகள் என்பவைகளை உருவாக்கி உள்ளடக்க ஆய்வாளர்கள் எண்ணியுள்ளனர். இவைகளின் செயற்பாடுகள், குருதிக் குழாய்கள்,
நரம்புகள், அதீத வளர்ச்சிக்கலங்களின் எல்லைகள்
என்பவற்றினை
மிகத்துல்லியமாக அடையாளப்படுத்தும்.
எனவே, தேவையற்ற சேதங்களைக் குறைத்து அறுவைச்
சிகிச்சையை மேற்கொள்ள
உருவாக்கப்படும்
இயந்திரத்தொகுதி உறுதுணையாக அமையும்.
இது மருத்துவத்துறையில் அபாயமற்ற வெற்றிகரமான அறுவைச்சிகிச்சை ஏற்பட வழிவகுக்கும்.