21.04.15 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஏனைய பிரிவு மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மூன்றாம் வருட மாணவர்களது கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுகின்றமையும் அது குறித்து நிர்வாகிகள் எவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
“இது பல்கலைக்கழகமா? பள்ளிக்கூடமா”, “எங்கே?எங்கே?சுற்றுலாக்கான நிதி எங்கே”, “போராட்டம் இது போராட்டம் எமது உரிமைக்கான போராட்டம்”;, “யாருக்கு யாருக்கு இராஜதுரை அரங்கு யாருக்கு” போன்ற சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியமும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.