( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் “டெங்கு ஒழிப்பு சிரமதான வாரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு” 23.03.2015 சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறை கல்லரச்சல் பிரதேசத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சிரமதானத்தை ஆரம்பித்து வைத்தார்.
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஏ.ஹுசைன்தீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், அம்பாரை மாவட்ட கிராமிய அபிவிருத்திப் பணிப்பாளர் கே.அருண்தவராஜா, அம்பாரை மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலிலுர்றகுமான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண அமைச்சர் மன்சூர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச்சிரமதான நிகழ்வில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டு செயற்பட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
நாமெல்லாம் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்று அரசாங்கம் பல வழிகளில் நிதிகளை ஒதுக்கி, பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டாலும், நாம் அந்த விடயங்களில் அக்கரை கொள்ளாத வரையில் எந்தப் பிரயோசனமும் இல்லை. பிள்ளைகளுக்குப் பாடசாலை இலவசம்!, உணவு இலவசம்! சீருடை இலவசம்! கற்பிக்கின்ற ஆசிரியருக்கு அரசாங்கம் சம்பளம் வழங்குகின்றது என்றாலும், பாடசாலைக்குப் பிள்ளையை யார் அனுப்புவது? நாங்கள் தான் அனுப்ப வேண்டும். அது இல்லாமல் அரசாங்கம் வீடு தேடி வந்து ஒவ்வொரு பிள்ளையையும் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாது. எனவே நமக்காக அரசு என்னதான் செய்தாலும், அதன் பயனை, அதன் நோக்கத்தை நாம் உணர்ந்து செயற்படாத வரையில் எந்தப் பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.