News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர்காலத்தில் பெறுவதற்கு நான் தயார் - மன்சூர்

'காலங்காலமாக பாராளுமன்ற உறுப்பினர்களையும்;, அமைச்சர்களையும் வைத்து அழகு பார்த்த சம்மாந்துறைக் கிராமம், கடந்த பொதுத் தேர்தலில் சிலரின் சதியால் தனது பிரதிநிதித்துவத்தை இழந்தது. இவ்வாறு இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர்காலத்தில் பெறுவதற்கு என்ன தியாகத்தைச் செய்வதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

அதற்காக ஏனைய அரசியல் தலைமைகளுடன் விட்டக் கொடுப்புடன் பேசவும் காத்திருக்கிறேன்' என்று மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலில் 'நிறைவான இல்லம், வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளிலான 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்' தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று முதல் நாள் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு,விளையாட்டுத் துறை, கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் நிகழ்வை ஆரம்பித்து வைத்து, உரைநிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரைநிகழ்த்துகையில்:- 

கடந்த பொதுத் தேர்தலில் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளவிருந்த எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிலரின் அரசியல் சித்து விளையாட்டுகளால் மிக இலகுவாக இழந்து விட்டோம். இந்த இழப்பினால் சம்மாந்துறை மக்கள் ஒவ்வொரு நாளும் பாரிய இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.

' நிறைவான இல்லம் வளமான தேசம்' என்ற கோசத்துடன் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்ற இவ்வாறான மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் மிகப் பெறுமதியான ஏற்பாடாகும்.இந்த ஏற்பாட்டிற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசீல் ராஜபக்ஷவை இச்சந்தர்ப்பத்தில் பாராட்ட விரும்புகிறேன். அதே போன்று இரவு பகலாகவும், விடுமுறை தினங்களிலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் பிரதேச செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட சகல உத்தியோகத்தர்களையும் பாராட்டுகின்றேன்.

ஓவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அடையாளங் காணப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை சம்மாந்துறைப் பிரதேச செயலக அபிவிருத்திக்கென எமது அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் 117 மில்லியன்களைக் கொண்டு நிறைவேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

என்னதான் இருந்தாலும் எமக்கென்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததனால் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான தொய்வு நிலைமை சீர் செய்ய முடியாத ஒன்றாகும்.என்னால் மாத்திரமல்ல, எமது தவிசாளர் நௌஷாத், எமது மாகாண சபை உறுப்பினர் அமீர் அவர்களினாலும் கூட ஈடு செய்ய முடியாது என்பதுதான் உண்மை.


தற்போது எமது ஊரில் மூன்று அரசியல் தலைமைகள் காணப்படுகின்ற போதிலும் எமது பிரதேசத்தின், மற்றும் மக்களின் அபிவிருத்தி தொடர்பான இறுதி முடிவு எங்களால் மேற்கொள்ளப்படுவதில்லை.அதாவது அதனைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு எமது பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர் சகோதரர் அமைச்சர் அதாஉல்லாவுக்குரியதாகும்.

ஓவ்வோரு மாதமும் ஒவ்வொரு துறைசார்ந்த அபிவிருத்தி,மற்றும் முன்னேற்றங்களை ஆராய வேண்டிய கூட்டங்கள் கடந்த மூன்றரை வருடங்களில் மொத்தமாக 42 தடவைகள் ஏனும் கூட்டப்பட்டிருக்க வேண்டும். மாறாக இற்றை வரை மூன்று கூட்டங்கள் மாத்திரமே நடைபெற்றுள்ளமை துரதிஷ்டவசமான நிலைமையாகும்.

அவ்வாறு தொடர்ச்சியாக இக்கூட்டங்கள் கூட்டப்பட்டிருந்தால் இன்றுவரை எமது மக்கள் எதிர்நோக்கி வரும் வீடு, மலசலகூடம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்பாசனம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றிருக்க முடியும்.

பல்வேறு வேலைப்பழுக்களுக்கும், 5 பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கின்ற அமைச்சர் அதாஉல்லாவால் இக்கூட்டங்கள் கூட்டப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.

இவ்வாறான நிலைமைகளுக்குக் காரணகர்த்தாக்கள் கடந்த 50 வருட காலமாக எமக்கென்றிருந்த பாராளுமன்ற உறுப்புரிமையை முன்யோசனை இல்லாத, சுயநல அரசியல்வாதிகளின் பிழையான வழிகாட்டலில் மக்களை ஏமாற்றி விட்டவர்களே பொறுப்புக் கூறவேண்டும்.

இனிமேலும் இவ்வாறான நிலைமையில் எமது மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது. ஏதிர்காலத்தில் எமது பாராளுமன்ற உரிமையை உறுதி செய்வதற்கு எமது அடுத்த அரசியல் தலைமைகளோடு பேச உள்ளேன். அதற்கு என்ன விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

அதேநேரம் இதனைக் குழப்புவதற்கு யார் முன்வந்தாலும் அதனை எமது மக்களுக்காக எதிர்கொள்வதற்கு என்ன விலை கொடுக்க வந்தாலும் இன்ஷா அல்லாஹ் நான் தயாராக இருக்கிறேன்.
Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .