பல்கலைக்கழகங்களின் சுற்றுச் சுழலில் இருக்கும் பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்தில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் செல்வாக்கு செலுத்த வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்மாந்துறை ரஹுமாஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் நேற்று மாலை சம்மாந்துறை அல் ஹம்றா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் ஏ.அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார். விசேட அதிதியாக சம்மாந்துறை கல்வி வலய முன்பள்ளி பாடசாலைகள் இணைப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ஒருவருடைய கல்வி வளர்ச்சியின் ஆரம்பம் முன்பள்ளி பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்கின்றது. நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்களை நோக்கிய போது அவர்கள் மிகத்திறமையான முறையில் அவர்களது திறமைகளை வெளிக்காட்டினர். இவர்களை, இவர்களது விவேகத்துடன் இணைந்து இன்னும் உட்சாகப்படுத்தி சமூகத்துக்கும் நாட்டுக்கும் பிரயோசனப்படக்கூடிய நட்பிரஜைகளாக கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட உபவேந்தர் இந்த பாலர் பாடசாலை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அருகாமையில் உள்ளது. இங்கே குறுகிய காலத்துக்குள் தகவல் தொழில்நுட்ப பீடத்தை ஆரம்பிக்க உள்ளோம். என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை சூழவுள்ள பாடசாலைகளினது கல்வி செயற்பாடுகளை மேன்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது வேண்டு கோளுக்கு இணங்க, இப்பிராந்திய பாடசாலைகளது கல்வி முன்னேற்றம் தொடர்பில் பங்களிப்புகளை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது ரஹுமாஸ் பாலர் பாடசாலையின் மாணவ செல்வங்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் சான்றிதல்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார். ரஹுமாஸ் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான ஐ.எல்.லத்திபா பஸ்லின் மற்றும் எஸ்.எல்.ஜென்னத்தும்மா ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர்களால் பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.