சம்மாந்துறை வீதிகளும் வடிகான்களும் திட்டமிட்டு கிழக்கு மாகாண சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. சம்மாந்துறை மக்களின் நன்மைகருதி அரசியல் வேறுபாடுகளை மறந்து அபிவிருத்தியில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 130 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விளினியடி வீதி மற்றும் வடிகான்களை பார்வையிட்டு சம்மாந்துறையில் நடைபெற்ற அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சென்னல் கிராமம், பவுஸ் மாவத்தை, வங்களாவடி போன்ற பல்வேறுபட்ட கிராமங்களின் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வீதிகள் அபிவிருத்திசெய்யப்படுவதனால் இப்பிரதேச மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், பிரதம பொறியியலாளர் ஏ.எம். றிஸ்வி, பொறியியலாளர் ரன்ஜித் பெர்ணான்டோ, ஜப்பான் பொறியியலாளர் ரீ.கவாய், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.