ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்த கோரி வலயக்கல்விப்பணிப்பாளரிடம் மகஜர் கையளிப்பு
கிழக்கு மாகாணத்தில் முறையற்ற விதத்தில் இடம் பெறும் ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் சம்மாந்துறை (07-12-2011) திகதி ஹிஜ்ரா பள்ளிவாசலின் முன்பாக இருந்து வலயக் கல்வி பணிமனையை நோக்கி பதாதைகள், கோசங்களுடன் வலயக்கல்விப்பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கும் முகமாக ஊர்வலமாக சென்றனர்.
இதன் போது பெண்களின் இடமாற்றத்தை இரத்து செய், எமது குழந்தைகளின் உரிமையை பாதுகாருங்கள்., சம்பூரில் பெண் ஆசிரியைக்கு நடந்த நிகழ்வை எமக்கு ஏற்படுத்தாதே, தாயையும் குழந்தையையும் பிரித்து தாய்-சேய் உரிமையை மறுக்காதே,பிள்ளை ஓர் இடத்தில் தந்தை ஓர் இடத்தில் தாய் வேறோரு இடத்திலா? மன உளச்ச்லுடன் தூரப்பிரதேசத்தில் கற்பிக்க முடியுமா? எனது தாயை என்னை விட்டுப் பிரிக்காதே, எங்கள் புள்ளிகளை ஏன் எங்களிடம் காட்டவில்லை. என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் ஆசிரியர்களின் மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன் இவ்விடையத்தை உடனடியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்ட வருவதாகவும் உறுதியளித்தார்.