News Update :

Follow on twitter

Follow on twitter

ads

ads
<>தற்போது கிடைத்த செய்திகள்>>

சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட்
சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட் (29) தனது 85வது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இரவு 9.25 மணிக்கு காலமானார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).

இவர் கடந்த 24ம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

இவர் 1926ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி சம்மாந்துறையில் அப்துல்மஜீட் வன்னிமை கதிசாஉம்மாவுக்கும், அஹமதுலெப்பை 
உடையார் முஹம்மதலி தபாலதிபருக்கும் தலைமகனாக பிறந்தார்
கிழக்கிலங்கையில் மதிப்புக்குரிய கல்வி மானாக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் ஏடுதுவக்கப்பட்ட மாணவராக தனது ஆரம்பக் கல்வியை 1933ம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்று 1934ம் ஆண்டு இடைநிலைக் கல்வியை தொடர்வதற்காக மட்டக்களப்பு சிவானந்தா கல்லலூரியிலும், உயர்தரக் கல்வியினை பெற்றுக் கொள்ள 1943 யாழ்பாணம் மத்திய கல்லூரிக்கு சென்ற இவர் 1946ம் ஆண்டு உயாதரப்பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று 1947ம் ஆண்டு கொழும்பு பல்கலை கழகத்துக்கு கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 1950ம் ஆண்டு பொருளாதாரப் பட்டதாரியாக பட்டம் பெற்ற இவர் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லீம் பட்டதாரி என்ற முத்திரையினையும் பதித்துள்ளார்.

பின்னர் தான் கற்ற மட்டக்களப்பு சிவானந்த கல்லூரியில் 1951 தொடக்கம் 1952 இறுதிவரை ஆசிரியனாக பணியாற்றிய இவர் 1953ம் ஆண்டு தொடக்கம் 1954ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பிராந்திய சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார்.

இதே கால கட்டத்தில் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி சம்மாந்துறை பிரதேசத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய கல்லோயா அபிவிருத்திச் சபையின் நீர்ப்பாசன பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய இஸ்மாயீல்துரை என்று அழைக்கப்பட்ட மீராலெப்பை முகம்மட் இஸ்மாயீல் மற்றும் அஹமதுலெப்பை போடி ஆயிஷா தம்பதியினரின் மூத்த மகளான றசீனதுல் கதிஜாவை திருமணம் செய்தார்.

இவ் இல்லற வாழ்கையில் இணைந்து கொண்ட அப்துல் மஜீட் அவர்களுக்கு ஜலாலுதீன் பாரூக்கி, பஸால் மாலிக்கி,பளுனா,நாஸர், முஹம்மட் லாபிர் ஆகிய நான்கு ஆண்களும், ஒரு பெண்னுமாக ஐந்து பிள்ளைகளின் தந்தையாக விளங்கினார்.

அதன் பின்னர் தான் வகித்து வந்த சமூகசேவை உத்தியோகத்தர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு 1954ம் ஆண்டு நடை பெற்ற பட்டின சபை தர்தலில் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட முதலாம் வட்டாரத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட அப்துல் மஜீட் அவர்கள் 6 வருடங்களாக பட்டின சபை தலைவராக பணியாற்றி தனது அரசியல் பயனத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1960ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தர்தலில் பொத்துவில் தொகுதிக்கு சுயேற்சை உறுப்பினராக போட்டியிட்டு 7736 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றார் பின்னர் அதே1960ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சைக் குழுவில் போட்டியிட்டு 10654 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.


அதனை தொடர்ந்து 1965 , 1970 , 1977 , 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக இருந்து 38 ஆண்டுகள் இப்பிராந்தியத்திலுள்ள தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்காக அளப்பரிய சேவைகளை செய்த ஒரு முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர்.
இவர் 1977ம் ஆண்டு தொடக்கம் 1978ம் ஆண்டு வரை காணி, விவசாயப் பிரதியமைச்சராகவும், 1978 தொடக்கம் 1980 வரை மின்சக்தி எரிபொருள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராகவும், 1980 தொடக்கம் 1981 வரை எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சராகவும்,  1981 தொடக்கம் 1983ம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும்,1983 தொடக்கம் 1989ம் ஆண்டுவரை தபால்இதந்தி, தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராகவும்,1989 தொடக்கம் 1992ம் ஆண்டு வரை நெசவுக் கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றி எமது மாகாணத்தின் அரசியல் முதுசமாக திகழ்ந்தவர்.

பொதுவாக கூறின் தன்னலம் கருதாத ஒரு மக்கள் சேவகன் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற உயரிய தத்துவத்துக்கு எடுத்துக் காட்டாக எம் மக்கள் மத்தியில் வாழ்ந்தவர் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பால் நின்று எல்லோரும் ஒரே இரத்தங்கள் என்ற உணர்வோடு வாழ்ந்து காட்டிய உத்தம புருஷர் என்றால் மிகையாகாது.


அன்னாருடைய இழப்பு தமிழ், முஸ்லீம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்.அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க நாம் அனைவரும் பிராத்திப்போம்.

Share this Article on :

வினோதம்

Comments

 

© Copyright Sammanthurai News 2015| Design by | Published by www.sammanthurai.net | .